திருச்சி போலீஸ் நடத்திய ரகசிய ஆபரேஷன் – கூண்டோடு சிக்கிய லாட்டரி மாஃபியாக்கள் லட்சக்கணக்கில் பணம் – செல்போன் – சொகுசு கார் பறிமுதல் !
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி ஆன்லைன் லாட்டரி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தலை தூக்கி உள்ளது. குறிப்பாக திருச்சி மாநகரில் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது. வெளி மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நடந்த அதிரடி வேட்டையில் , திமுக பிரமுகரும் சட்ட விரோத லாட்டரி கும்பலின் முக்கியமானவருமான எஸ்.வி.ஆர். மனோகர் உள்பட மூன்று பேர் நேற்று ( டிச.25 ) கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை ,தில்லை நகர் ,உறையூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர் .இந்த சோதனையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உறையூர் பகுதியில் பிடிபட்ட செந்தில்குமரன் என்பவரிடம் 4,லட்சத்து 92, ஆயிரத்து 100 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல் கைதான மற்றவர்களிடமிருந்து10 செல்போன்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் மற்றும் கட்டு, கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து திருச்சி மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இனி லாட்டரி விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments are closed.