Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் முதியவரை தாக்கிய காவலர்கள் இருவர் ‘சஸ்பெண்ட்’ …!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று (செப்.3) வருகை தருகிறார். பட்டமளிப்பு விழாவை முடித்த பின்பு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ஜனாதிபதி திருச்சி வருகையை முன்னிட்டு நகரின் பல பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் வளாகத்தில் இருந்த யாசகர்களை ஸ்ரீரங்கம் போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வயதான முதியவர் ஒருவரை போலீசார் தாக்கியும், காலால் எட்டி உதைத்தும், வலுக்கட்டாயமாக கோவில் வளாகத்திலிருந்து வெளியேற்றினர். முதியவரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இருவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரங்கநாதர் திருக்கோவிலுக்கு ஜனாதிபதி வருகை தர உள்ளதையொட்டி, கோவிலின் உள்ளே இருக்கும் வயதானவர்கள், யாசகர்கள், ஆதரவற்றவர்களை காப்பகங்களில் சேர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் இருவர், யாசகர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை காப்பகத்திற்கு அனுப்ப வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் காவலர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமல் அவர்களை ஆபாசமாக திட்டியதால் அம்முதியவரை காவலர்கள் தாக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வாகனத்தில் ஏற்றி அனுப்பியதாக தெரியவருகிறது. மேற்படி இச்சம்பவத்தில் முதியவர்களை தாக்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் ஏட்டு மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்