கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது விஜய் குறித்து சில கருத்துக்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேவேளை, அவதூறுகள் பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படுகின்றன. இந்தநிலையில் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டியை சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளரான நிர்மல்குமார் (வயது 35). இவர், முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மல்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தொடர்ந்து அடைத்தனர். இதனையடுத்து அவர் ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று( அக்.14) விசாரித்த நீதிமன்றம் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Comments are closed.