திருச்சி, உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்…!
தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய பெருமைமிக்க வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழா நாட்களில் ஒவ்வொரு நாள் இரவு 7 மணிக்கு கேடயம், பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம் என பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(14-04-2025) நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மதியம் 12 மணிக்கு மேல் நிலையை அடைந்தது. இதில் திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால் குடங்கள், அக்னி சட்டிகள் ஏந்தி வெக்காளியம்மன் கோவிலை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு வையுர் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Comments are closed.