திருச்சி பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட் எதற்காக, யாருக்காக கட்டப்படுகிறது என்பதை மாநகராட்சி விளக்க வேண்டும்… * காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் 30- 08- 2025 சனிக்கிழமை மாலை திருச்சி- தஞ்சை ரோடு பகுதியில் உள்ள வலீமா ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் எம். காதர் மைதீன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜி. வெங்கடாசலம், அவைத்தலைவர்கள் யு.எஸ்.கருப்பையா, ஜி.பாலசுப்ரமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசகர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைத் தலைவர்கள், இணை செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செயலாளர் என்.டி. கந்தசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், திருச்சி காந்தி மார்க்கெட் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட மாட்டாது, ரூ.50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்று அறிவித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. காந்தி மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு, சாக்கடைகள் தூர்வாரும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனை கண்டிப்பதோடு இனிமேலும் காலதாமதம் செய்தால் போராட்டம் நடத்துவது. திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என்று அறிவித்துவிட்டு பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட் எதற்காக, யாருக்காக கட்டப்படுகிறது என்பதை மாநகராட்சி நிர்வாகம் தெளிவாக விளக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் 20 நபர்கள் கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்தி இந்த குழுவில் உள்ள வியாபாரிகள் இனிவரும் காலங்களில் நமது கட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்வது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Comments are closed.