திருச்சி, ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ! கேள்விகளால் துளைத்த செய்தியாளர்கள் – விலாவாரியாக விவரித்த அமைச்சர் சேகர் பாபு !
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என புகழப்படுவதுமான திருச்சி,ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வருகிற ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி இக் கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு அரசின் சார்பில் என்னென்ன சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன? கிழக்கு கோபுர வாசல் எப்போது திறக்கப்படும் ? ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு என நிரந்தரமான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு. ‘ சொர்க்கவாசல் திறப்புக்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் விடுமுறையும் இருப்பதால் அதிக பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக சுமார் 3000 நபர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிரந்தர பார்க்கிங் வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஒருவேளை பார்க்கிங்க்கும் கோவிலுக்கும் நீண்ட இடைவெளி இருந்தால் அதற்கு பேட்டரி கார் சேவை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ரூபாய் 2 கோடியே 25 லட்சம் செலவில் நன்கொடையாளர்களின் பங்களிப்போடு கிழக்கு கோபுர வாயிலின் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்றார். இப்பேட்டியின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி,திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, மற்றும் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.