Rock Fort Times
Online News

திருச்சி ‘ராக்போர்ட் டைம்ஸ்’ செய்தி எதிரொலி: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூர்மையான ஆயுதத்துடன் பைக்கில் பவனி வந்த வாலிபர் கைது…! (வீடியோ இணைப்பு)  

திருச்சி மாநகர பகுதியில் உள்ள முக்கியமான சாலைகளுள் ஒன்று கல்லுக்குழி குட்ஷெட் மேம்பாலம். இந்த பாலத்தின் வழியாக புதுக்கோட்டை, கீரனூர், விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் ஏப்ரல் 10-ம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில்  டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து போஸ்ட் ஆபிஸ் சிக்னல் செல்லும் சாலையில், இரண்டு இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த ஒரு வாலிபர், கையில் வைத்திருந்த கூர்மையான  ஆயுதத்துடன் சாலையை கிழித்தபடி  சென்றார்.

இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனை அவர்களுக்கு பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இதற்கான வீடியோ ‘திருச்சி ராக்போர்ட் டைம்ஸ்’ தமிழ் வார இதழ் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த வீடியோவை பார்த்த காவல்துறை அதிகாரிகள், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். மேலும், இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. அதன்பேரில், திருச்சி கண்டோன்மெண்ட் காவல் துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்தனர். அதோடு தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட பைக்கின் பதிவெண்ணை வைத்து இன்று (ஏப்ரல் 12) திருச்சி, பாலக்கரை, பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (வயது 29) என்பவரை கைது செய்தனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் தனிப்படைகள் கலைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் இது விஷயத்தில் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய உத்தரவிட்ட திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் மற்றும் சிறப்பாக செயல்பட்டு அர்ஜுனை கைது செய்த தனிப்படை போலீசார் மற்றும் சோசியல் மீடியாவில் செய்தி வெளியிட்டு உதவிய திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் நிர்வாகத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்