திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் செயல்பட்டு வருகிறது. துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் கிளப்பின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27 மற்றும் 28ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதில், திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஆண்கள், பெண்கள் என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில், அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. போட்டியில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும், ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்கப் பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலம் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி.கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார். இதில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.