Rock Fort Times
Online News

24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் மாநகராட்சிகளில் திருச்சி முதலிடம்- மேயர் மு.அன்பழகன் பெருமிதம்…!

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையிலும், கமிஷனர் சரவணன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையிலும் இன்று (29-04-2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள், மு.மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி, ஜெயநிர்மலா, மற்றும் துணை கமிஷ்னர், உதவி கமிஷனர், நகர்நல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
கோ.கு.அம்பிகாபதி: (அதிமுக):
காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு லைசன்ஸ் ஒன்பது வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுவது வழக்கம். வாடகை வருடத்திற்கு 5% என மூன்று வருடத்திற்கு ஒரு முறை 15% உயர்த்தப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு மணிகண்டத்தில் புது மார்க்கெட் கட்டிய பிறகு காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு லைசன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை. ஆனால் பழைய முறைப்படி வாடகை வசூலிக்கப்படுகிறது. லைசன்ஸ் புதுப்பிக்கப்படுவது இந்த 2025 ஆம் ஆண்டு முடிகிறது. தற்போது தாழ்வாரம் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அளந்து 15 சதவீத வாடகை உயர்வு மட்டும் அல்லாமல் அனைத்து கடைகளுக்கும் கூடுதல் வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைகளுக்கு முன்பு தாழ்வாரம் அமைத்துள்ள கடைகளுக்கு பொதுப்பணித்துறை சந்தை மதிப்பு படி வாடகை வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் காந்தி மார்க்கெட் கடைகளுக்கு லைசன்ஸ் புதுப்பித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .காந்தி மார்க்கெட் இங்கேயே தற்போது உள்ள இடத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல். ரெக்ஸ் (காங்கிரஸ்):
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையினை சோனா- மீனா தியேட்டர் எதிரில் அமைக்கவேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையினை நிறைவேற்றிய அமைச்சர் நேருவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வக்கீல் கோவிந்தராஜன் ( காங்கிரஸ்):
இதுவரை திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலையை ரசிகர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று திறக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :
ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் இனி நீக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்த முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக):
திருவானைக்காவல் பகுதியில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. எனவே அப்பகுதியில் தனி காவல் நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

காஜாமலை விஜய் ( திமுக ) :
எனது வார்டில் எந்த பணிகளும் நடப்பதில்லை. என்ன சொன்னாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.மதிவாணன் (மண்டல குழு தலைவர் ) :
எனது மண்டலத்தில் வார்டுகளில் உள்ள பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கே பிரச்சனையாக உள்ளது .எனவே வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு காலியாக உள்ள கணினி ஆப்ரேட்டர் பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

விஜயலட்சுமி கண்ணன் (மண்டல குழு தலைவர்):
திருச்சி பட்டாபிராமன் சாலையில் இருபுறமும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

முத்துச்செல்வம் (திமுக ) :
எனது வார்டில் ஒரு
அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
அங்கு தினமும் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
இதனால் வார்டில் உள்ள மற்ற வீடுகள், குடிசை பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் கிடைப்பதில்லை.

எல்.ஐ.சி. சங்கர் (திமுக ) :
ரூ..மூன்று கோடியில் வாங்கிய புதை வடிகால் வாகனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதேபோல கவுன்சிலர்கள் பலர் பேசினர்.

மேயர் அன்பழகன்:-
24 மணி நேரமும் தினசரி குடிநீர் வழங்கும் மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. எதிர்வரும் காலத்தில் வீடுகள்தோறும் மீட்டர் பொருத்தப்பட்டால் குடிநீரின் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது. விரைவில் வீடுகள் தோறும் புதை வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்