தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மீது திருச்சி மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக இம்மாதம் செப்டம்பர் 13ம் தேதி த.வெ.க தலைவர் விஜய் திருச்சி வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு கேட்டு திருச்சி மாநகர போலீசாரிடம் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி வந்திருந்த புஸ்ஸி ஆனந்த் திருச்சி ஏர்போர்ட் அருகேயுள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக வாகனம் நிறுத்தியதோடு, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் தற்போது புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 6 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வருகிற 13ம் தேதி திருச்சியில் பேரணி நடத்துவதற்காக போலீசார் இன்று வரை அனுமதி கொடுக்காததால் த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் கலக்கத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.