Rock Fort Times
Online News

கடைசி கட்ட “பர்ச்சேஸ்” திணறியது திருச்சி என்.எஸ்.பி.சாலை …

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்( 12.11.2023 ) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியாக விளங்கும் என்.எஸ்.பி.சாலை, தெப்பக்குளம், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சின்ன கடைவீதி மற்றும் தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 100க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ளன.
அதேபோன்று காலணிகள், பழக்கடைகளால் இந்த பகுதி நிறைந்திருக்கும். சாதாரண நாட்களில் இந்த சாலையில் கூட்டம் நிரம்பி வழியும் . தீபாவளிக்கு இன்னும் நாளை ஒரு நாள் , மட்டுமே உள்ளதால் கடைசி கட்ட பர்ச்சேஸ்க்காக இன்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. நவீன காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆடை, அணிகலன்கள், காலணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், உணவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்கினாலும் நேரடியாக கடைகளுக்கு வந்து வாங்குவோரின் எண்ணிக்கை இன்னும் குறைந்ததாக தெரியவில்லை.

கூட்டத்தை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி பகுதிகளில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
பொதுமக்களிடமிருந்து நகைகள், பணம்  மற்றும் பொருட்களை திருடும் நபர்களை கண்காணிக்கவும், குற்றச் செயல்களை தடுக்கவும் திருச்சி மாநகர காவல் துறை முழு முனைப்பில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் மாநகரப் பகுதிகளில், வணிக வளாகங்களில்   பல இடங்களில் கேமராக்கள் ஏற்கெனவே நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் பொது இடங்களில் நடைபெறும் திருட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறை, பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளை தேர்வு செய்து அங்கே கூடுதலாக தற்காலிக கண்காணிப்பு கேமிராக்களை அமைத்துள்ளது. மேலும் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.மேலும், மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் 16 கண்காணிப்பு கேமிராக்கள், சோனா மீனா திரையரங்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 கேமிராக்கள், மத்திய பேருந்து நிலையப் பகுதியில் 44, சத்திரம் பேருந்து நிலையம், துறையூர் பேருந்துகள் புறப்படும் இடம், என்எஸ்பி சாலை, சிங்காரதோப்பு, சூப்பர் பஜார், நந்திகோயில்தெரு, உள்ளிட்ட பகுதிகளில் 102 என மொத்தம் 164 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மாநகர் முழுவதும் மொத்தம் 1,059 போலீசார் இரவு- பகலாக ஷிப்ட் முறையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருச்சி கோட்டை என்எஸ்பி சாலையில் தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையமும், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.கோட்டை பகுதியில் பழைய குட்ஷெசட் சாலையில் (கோட்டை ரயில் நிலையம்) உள்ள ரயில்வே மைதானத்தில் நான்கு சக்கர வாகனங்கள், கோட்டை பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சிங்காரதோப்பு செல்லும் வழியில் பூம்புகார் விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள யானைக்குளம் பகுதி, பெரியகடை வீதி வழியாக வரும் வாகனங்கள் கிலேதார் சாலை வழியாக சென்று கீழரண்சாலையில் உள்ள வாகன நிறுத்தத்திலும், நந்திகோயில் வழியாக வரும் வாகனங்களை பட்டர்வொர்த் சாலையிலும் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது புகார்களை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 க்கும், மாநகர காவல் ஆணையர் அலுவலக 96262 73399 என்ற எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்