“நீர்த்தேக்க தொட்டியில் கழிவு பொருள் கிடந்தது திட்டமிட்டு செய்த செயல் அல்ல”- விளக்கம் அளித்தது திருச்சி மாநகர காவல்துறை…!
திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு தையல்காரத் தெருவில் உள்ள நீர்தேக்க தொட்டியின் மேல் மனிதக் கழிவுகள் கிடப்பதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், சுமார் 15 அடி உயரம், 6 அடி நீளம், 4 அடி அகலம் மற்றும் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் சிலாப் போட்டு மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீர் உப்பு தண்ணீராகும்.குடிப்பதற்கு பயன்படுத்த முடியாது. இந்நிலையில் நேற்று (05.02.2025) மாலை 4 மணியளவில் மேற்படி மூடிய நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் சிலாப்பின் மேல் கழிவுகள் சிறிதளவு இருந்துள்ளது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அறிந்து உடனடியாக நீர்த்தேக்க தொட்டியினை சுத்தம் செய்துள்ளனர். இந்த நீர்தேக்க தொட்டியில் மலமோ அல்லது கழிவுகளோ கிடப்பதாக செய்திகள் வெளிவந்தன. மூடிய நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் அருகில் 4 அல்லது 5 மாடிகள் கொண்ட உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் 18க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்படி, கழிவினை தொட்டியின் அருகில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் ஏதோ ஒரு குடும்பத்தினர் வீசியிருக்கலாம். இது யாரும் திட்டமிட்டு செய்த செயல் அல்ல என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.