திருச்சி காந்தி மார்க்கெட் மாநகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டின் உள்ளேயும், வெளிப்புறங்களிலும் ஆயிரக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன. இங்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள், இறைச்சி வகைகள், பூண்டு, வெங்காயம் என அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் தரமாக கிடைப்பதால் திருச்சி மக்கள் மட்டுமின்றி தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். திருமணம் போன்ற விசேஷ நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் காந்தி மார்க்கெட் களை கட்டியிருக்கும். ஆனால், மழை பெய்தால் மார்க்கெட் உள்ளே கால் வைக்க முடியாது. அந்த அளவுக்கு சேரும் சகதியுமாக மாறிவிடும். இதனை கருத்தில் கொண்ட திருச்சி மாநகராட்சி, நூற்றாண்டு பழமை வாய்ந்த காந்தி மார்க்கெட்டை புதுப்பிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டது. இதனை, ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்தையை, நகரின் புறநகரில் உள்ள கள்ளிக்குடி ஒருங்கிணைந்த சந்தைக்கு மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
காந்தி மார்க்கெட் பழமையானது மற்றும் வலுவிழந்ததால் கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி இந்த திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்தது. பல்வேறு சிக்கல்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு சாத்தியக்கூறு அறிக்கையை உருவாக்க ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டார். தற்போதுள்ள 3 ஏக்கர் நிலத்தில் பல தள சந்தை அமைக்க ₹50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு வடிவமைப்பை உருவாக்க அதன் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய ஒரு புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டது. சந்தைக்கான DPR நிர்வாக அனுமதிக்காக மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கிட்டத்தட்ட 950 கடைகளைக் கொண்ட இந்த மார்க்கெட்டில் பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்களுக்கு தனித்தனி இடங்கள் உள்ளன. மேலும், 800க்கும் மேற்பட்ட அமைப்புசாரா விற்பனையாளர்கள் சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் மேம்படுத்தப்படும். காந்தி மார்க்கெட்டின் மொத்த வியாபாரிகளை பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில், பல பயன்பாட்டு வசதிகள் மையம் மற்றும் டிரக் டெர்மினல் ஆகியவை மார்க்கெட்டில் இருந்து மிகவும் பக்கத்தில் இருப்பதால், பிற மாவட்ட வியாபாரிகளும் ஆர்வம் காட்டுவார்கள். விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரையும் எளிதாக அணுகுவது குடிமை அமைப்புக்கான வருவாயை அதிகரிக்கும் என்று கூறினார். இது ஒருபுறம் இருக்க “மார்க்கெட் பழமையானது மற்றும் பாழடைந்துள்ளதால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது காலத்தின் தேவை. வாகன போக்குவரத்துக்கு வழிவகுக்கும் வகையில் அமைப்புசாரா விற்பனையாளர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.