திருச்சி, அண்ணா சிலை அருகேயுள்ள பூசாரி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அக்பர் கான் இவரது மனைவி பாத்திமா, அண்ணா சிலை பகுதியில் சூப் கடை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதி கோரி பலமுறை விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு மக்கள் குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் போல வந்த ஒருவர், ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் தள்ளுவண்டி வாங்கித் தருவதாக கூறி, பாத்திமா மற்றும் அக்பர் கானிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டு திரும்பி வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த தம்பதியினர், மாவட்ட ஆட்சியரிடமும் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், மோசடி ஆசாமியை ஒன்றரை மாதமாக தேடி வந்த நிலையில், இன்று திருச்சி ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்த அந்த நபரை, கணவன்-மனைவி இருவரும் பொதுமக்களின் உதவியுடன் துரத்திப் பிடித்தனர். பின்னர், இன்று காலை நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் குறைதீர் முகாமில் ஆட்சியரிடம் ஒப்படைக்க, அந்த நபரின் கை, கால்களை கட்டி ஆட்டோவில் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில், அந்த நபரின் பெயர் மணி (45), கரூர் மாவட்டம் பிரம்மதீர்த்த சாலையைச் சேர்ந்தவர் என்றும், முன்னதாக தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றி வேலையை விட்டு நின்றதும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை ஏமாற்றி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், மோசடி நபர் குறித்து முன்பே புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியை பிடித்து ஆட்சியரிடம் அழைத்து வந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.