அலுவலகத்துக்குள் புகுந்து தன்னை மிரட்டியதாக திருச்சி திமுக நிர்வாகி மீது, போலீசில் சார்பதிவாளர் புகார்…!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் வின்னகரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, சபரிராஜன் என்பவர் சார் பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், திருச்சி தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர், எலந்தபட்டி மற்றும் காந்தளூர் பகுதியில் மற்றவருடைய பெயரில் உள்ள நிலத்தை விற்பதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே, பிரச்சனைக்குரிய இடத்திற்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என டிஆர்ஓ உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த இடத்திற்கு பத்திர பதிவு செய்து கொடுக்கும்படி சார் பதிவாளரை மாரிமுத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (28-02-2024) சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்த மாரிமுத்து பிரச்சனைக்குரிய இடத்திற்கு பத்திர பதிவு செய்து கொடுக்க
சார்பதிவாளர் சபரிராஜனை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. அதற்கு சபரிராஜன், இடம் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தன்னால் பத்திர பதிவு செய்து கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாரிமுத்து, சபரிராஜனை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசில் சபரி ராஜன் புகார் செய்தார்.
மேலும், திருச்சி மாவட்ட பதிவாளரிடமும் மாரிமுத்து மீது புகார் செய்துள்ளார். ஏற்கனவே மாரிமுத்து மீது நில அபகரிப்பு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பெண்ணை ஆபாசமாக திட்டியது சம்பந்தமாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.