திருச்சி பொதிகை கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ( 26.09.2023 ) தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு கோ-ஆப் டெக்ஸ் மூலம் 1 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 3 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோ-ஆப் டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் மூலம் 11 மாத சந்தா தொகை பெறப்பட்டு வருகிறது. இதன் முதிர்வு காலத்தின் போது பொதுமக்கள் கட்டிய தொகைக்கு ஏற்ப 30 சதவீத தள்ளுபடி விலையில் துணிகளை வாங்கிக் கொள்ளலாம். மேலும், கைத்தறி நிறுவனத்தில் யாருக்கு எந்த கலர் விருப்பமாக உள்ளதோ அந்த கலரை தேர்வு செய்து தயாரிக்கும் அளவிற்கு தமிழக கைத்தறி நெசவாளர் உற்பத்தி நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு ஆயிரம் விதமான ரகங்களிலும், வண்ணங்களிலும் தயாரித்து கொடுக்கும் அளவிற்கு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் , கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரவிக்குமார், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் ஐயப்பன், மண்டல மேலாளர் அம்சவேணி, திருச்சி பொதிகை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர் மற்றும் அப்துல் ரகுமான் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.