Rock Fort Times
Online News

திருச்சி வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் பாஜக அணியினரின் கை ஓங்கியது !

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்தின் 2023 – 2024ம் ஆண்டிற்கான தேர்தல் மிக சமீபத்தில் நடைபெற்று, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ‘திருச்சி பார்’ எனப்படும் திருச்சி வழக்கறிஞர் சங்கம், நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க மிக பழமைவாய்ந்ததாகும். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 20 புதிய நிர்வாகிகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட வேண்டும். சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 1300 வழக்கறிஞர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மூத்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், ரமேஷ் நடராஜன், சேதுராஜன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்று தேர்தலை நடத்தினார்கள். இந்த ஆண்டுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.பாலசுப்பிரமணியன், சத்திய மூர்த்தி, சுரேஷ் ராஜ், வைரமணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 596 வாக்குகள் பெற்று எஸ். பாலசுப்பிரமணியன் புதிய தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் செயலாளராக k. கண்ணன், இணை செயலாளராக T. நவநீத கிருஷ்ணன், துணைத் தலைவராக K.T. சிவகுமார், பொருளாளராக R.சசிகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக வடிவேல் சாமி, பாஸ்கரன், கார்த்திகேயன், ஆரோக்கிய கிஷோர், சாந்தி, சிவக்குமார், J.கோபிநாதன், S.சுதர்சன், கங்காதரன், சுவாதி, N.சந்திரமோகன், S.சந்தோஷ் குமார், வெனிஸ் குமார், E.ஜார்ஜ் கெவின், ஆ.சுகன்யா மேரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வக்கீல் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலசுப்பிரமணியன் ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜனின் மகன் ஆவார். இவர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே திருச்சி வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளராக இருந்து சிறப்பாக பணியாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி நூற்றாண்டு வரலாற்று சிறப்புமிக்க திருச்சி பாரில் இளம் வயதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் பாலசுப்பிரமணியனுக்கு உள்ளது. புதிய தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகளுக்கு திருச்சி வழக்கறிஞர்கள் பலரும் மாலை, சால்வைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். வழக்கமாக வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில், தமிழ்நாட்டை ஆளும் கட்சி ஆதரவு வழக்கறிஞர்கள் தான் நிர்வாகிகள் பட்டியலில் அதிக முக்கியத்துவம் பெறுவர். வெற்றியும் பெறுவார்கள். இப்படிப்பட்ட கடந்த கால வரலாற்றை புரட்டி போட்டுள்ளது நடந்து முடிந்த, தற்போதைய தேர்தல். திராவிட மாடல் ஆட்சி நடந்து வரும் தமிழ்நாட்டில், பாரதிய ஜனதாவின் தாமரை, ஒரு காலத்திலும் மலரவே மலராது என்ற திராவிட ஸ்லோகத்தை மாற்றிக் காட்டி இருக்கிறது  திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு மனநிலை மற்றும் நேரடி செயல்பாடு கொண்டவர்களே, தலைவர், செயலாளர், பொருளாளர், இணை செயலாளர் மற்றும் 1 செயற்குழு உறுப்பினர் என முக்கியத்துவம் வாய்ந்த 90% பதவிகளில் பாஜகவினரே வென்றுள்ளார்கள். இவர்களில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் k.கண்ணன், பொருளாளர் R.சசிகுமார், இணைச் செயலாளர் T.நவநீதகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் சாந்தி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு வழக்கறிஞர்கள் ஆவர். காலம் காலமாக திராவிட கட்சிகளின் ஆக்கிரமிப்பு இருந்து வந்த வழக்கறிஞர்கள் சங்கத்தில் இந்த முறை பாஜக ஆதரவு வழக்கறிஞர்களே புதிய பரிமாணத்தோடு வென்று காட்டியுள்ளனர். என்றென்றும் நடுநிலையை கண்ணியத்தோடு கடைப்பிடித்துவரும் “ராக்போர்ட் டைம்ஸ்” எழுதியுள்ள இக்கட்டுரையின் நோக்கம், பாஜகவுக்கு ஆதரவானதும் அல்ல. திராவிட கட்சிகளுக்கு எதிரானது அல்ல. நடக்காது, காலூன்ற முடியாது, மலராது என கிண்டல் கேலி செய்யப்பட்ட பாஜக, வழக்கறிஞர்கள் சங்கத்திலேயே வலுவாக காலூன்றிவிட்டது. இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டால் மட்டுமே ஆட்சியாளர்களின் இருப்பு தக்கவைக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்