திருச்சி கண்டோன்மெண்ட் அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் 5-வது கும்பாபிஷேக விழா இன்று ( 08.12.2023 ) நடைபெற்றது. இதையொட்டி 39-வது மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் ( 6.12.2023 ) மகா அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். பூா்வாங்க பூஜைகள் நடைபெற்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடா்ந்து நாளை (9-ந்தேதி) தொடங்கி 14ந் தேதி வரை அய்யப்பனுக்கு பிரம்மோத்சவ பூஜைகளை சபரிமலை பிரதான தந்திரி கண்டரு மோகனரு நடத்தவுள்ளாா்.
மேலும், நாளை (9ந்தேதி) காலை 8 மணிக்கு வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மண்டல பூஜை முடியும் வரை தினமும் பூஜைகள், அபிஷேகம், லட்சாா்ச்சனை, பக்திச் சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்வுகள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப சங்கத்தினா் செய்து வருகின்றனர். அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.