திருச்சி ஆவின் நிர்வாகம் முகவர்களுக்கு உரிய நேரத்தில் பால் விநியோகம் செய்யவில்லை என ஆவின் நிறுவனம் முன்பாக முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் தினந்தோறும், 2.30 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. திருச்சி ஆவின் மூலம், 150 க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு, தினந்தோறும், 1.40 லட்சம் லிட்டர் பால், பாக்கெட்டுகளாக விநியோகம் செய்யப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்களின் விலை உயர்வை தொடர்ந்து, திருச்சி ஆவின் விற்பனை சராசரியாக, 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருச்சி ஆவின் நிறுவனத்தில் பல மாதங்களாக முறையான பராமரிப்பு இன்றி இருக்கக்கூடிய, பால் பதப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பால் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், முகவர்களுக்கு தினந்தோறும் தாமதமாகவே பால் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் கடும் அவதிக்குள்ளாகி வரும் பால் முகவர்கள் தற்போது ஆவின் நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.