Rock Fort Times
Online News

திருச்சி, கேகே நகர் பகுதியில் உயர்வழுத்த மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்தபோது விபரீதம்: மின்சாரம் பாய்ந்து 2 மின் ஊழியர்கள் பலி…! (வீடியோ இணைப்பு)

திருச்சி கேகே நகரை அடுத்த ஓலையூர் ரிங்ரோடு பகுதியில் உயர்வழுத்த மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மின்வாரியத்தைச் சேர்ந்த 2 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உயர்வழுத்த மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்களின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், ஒருவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். மற்றொருவர் மின் கம்பத்தில் தொங்கியபடியே கருகி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மணிகண்டம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஊழியரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இந்நிலையில் மின் வயரில் சிக்கி இறந்து கிடந்த மின் ஊழியரை தீயணைப்பு வீரர்கள் நவீன ஏணி மூலம் ஏறி அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அருணா பட்டியை சேர்ந்த கலாமணி (வயது 45) மற்றும் மணப்பாறை கல்லுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் (32) என்பதும், அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மின்சார வாரியத்தில் பணியாற்றியதும் தெரிய வந்தது. இறந்த கலாமணி மற்றும் மாணிக்கம் உடல்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.தகவல் அறிந்து வந்த அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர் .இந்த சம்பவம் திருச்சி மற்றும் மணப்பாறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்