Rock Fort Times
Online News

நண்பரை வெளிநாடு அனுப்ப சென்றபோது துயரம்: லால்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த கார்- 3 பேர் பலி…!

திருச்சி மாவட்டம், லால்குடி முஸ்லிம் தெரு தேமுட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் சந்தோஷ். எலெக்ட்ரிசியன். இவருக்கு சவுதியில் வேலை கிடைத்தது. இதையடுத்து இவர் இன்று (ஆகஸ்ட் 9) துபாய் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரில் அவரது குடும்பத்தினரும் இருந்தனர். மற்றொரு காரில் அவரது நண்பர்களான லால்குடி நன்னிலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20), லால்குடி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா (20) உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். சந்தோஷ் குடும்பத்தினர் சென்ற கார் முதலில் வேகமாக சென்று விட்டது. அதனை பின்தொடர்ந்து
நண்பர்கள் பயணம் செய்த கார் சென்று கொண்டு இருந்தது. லால்குடி- திருச்சி மெயின் ரோட்டில் சரஸ்வதி கல்லூரி முன்பு வந்தபோது நண்பர்கள் சென்ற காரும், எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் காருக்குள் படு காயங்களுடன் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அரவிந்த் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாதிக் பாட்ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த லால்குடி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் ( 56) என்பவரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வாலிபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் இறந்த 3 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. வெளிநாடு செல்லும் நண்பரை வழி அனுப்ப சென்ற வாலிபர்கள் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்