Rock Fort Times
Online News

விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு திரும்பிய போது துயர சம்பவம்: டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி…!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  தேனி மாவட்டத்தில் தேனி நகர், ஆண்டிபட்டி, கம்பம், போடி, கூடலூர், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் அந்த சிலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டு முல்லைப்பெரியாறு, வைகை ஆறு மற்றும் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. சிறுவர்களும் ஆங்காங்கே சிறு சிறு சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்தனர்.  அதன்படி,  தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் விஷால்(14), நிவாஸ்(14), கிஷோர்(14) மற்றும் சிலர் அவர்களது வீடு அருகே விநாயகர் சிலை வைத்து சதுர்த்தியை கொண்டாடிவிட்டு விநாயகர் சிலையை டிராக்டரில் அலங்காரம் செய்து கரைப்பதற்காக சிந்தலச்சேரி சென்றுள்ளனர்.  சிந்தலச்சேரி குளத்தில் சிலையை கரைத்து விட்டு அங்கிருந்து திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து 3 அடி பள்ளத்தில் டிராக்டர் தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 3 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து  தகவலறிந்த தேவாரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 சிறுவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்