பெரம்பலூரில் துயரம்: ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இரு வாலிபர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு…!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, தொண்டமாந்துறை கிராமத்தில் கல்லாறு உள்ளது. இந்த ஆற்றில் உள்ள தண்ணீரில் அதிக அளவில் மீன்கள் உள்ளதால் அந்த மீன்களை பிடிப்பதற்காக அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் ஆற்றில் மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடித்து வந்துள்ளனர். இவ்வாறு மீன்பிடிப்பது மிகவும் ஆபத்தானதாகும். ஆனால், ஆபத்தை உணராமல் இன்று( மே 4) அதிகாலை கல்லாற்றில் தொண்டமாந்துறையை சேர்ந்த சேகர் மகன் தினேஷ் குமார்( 28), கணேசன் மகன் ரஞ்சித்( 25) ஆகிய இருவரும் கல்லாற்றில் மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் இருவரும் வழுக்கி விழுந்துள்ளனர். இதனால், அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை அறிந்த ஊர் மக்கள் அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.