கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் துயரம்: திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு…!
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 17).பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்தமாகி வந்தார். இந்நிலையில் நேற்று( ஜூன் 1) பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சந்தோசுடன் முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு சென்றார். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி இருவரும் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்த தகவலின்பேரில் திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷ்குமாரை மாலை வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று காலையில் தீயணைப்பு படையினர் தேடும்பணியை தொடங்கினர். அப்போது தினேஷ் குமாரை சடலமாகத் தான் மீட்க முடிந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் தினேஷ் குமார், கல்லூரி செல்ல இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.