திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்துக்கு அருகாமையில் பசுமை பூங்கா அருகில் 20.71 ஏக்கர்
பரப்பளவில் ரூ.256 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று(29-06-2024) நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், ஆசியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக பஞ்சப்பூர் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 லட்சத்து 46 ஆயிரம் பயணிகள் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது ஆகவே, பஞ்சப்பூர் எதிர்காலத்தில் ஒரு மினி சிட்டியாக இருக்கும். ஆகவே இந்த புதிய மார்க்கத்தில் உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். இதில் 122 சதுர அடி முதல் 600 சதுர அடி வரை கடைகள் அமைக்கப்படுகிறது.
மேலும், வாகனங்கள் நிறுத்த விசாலமான வசதிகள் செய்யப்படும் என்றார். பின்னர் கூட்டத்தில் வியாபாரிகள் கருத்து கூறும்போது, கடந்த அதிமுக ஆட்சியில், காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றம் செய்ய அங்கு ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் ரூ.77 கோடியில் கட்டப்பட்டது. அவர்கள் எங்களிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை. பின்னர் வியாபாரமின்மை, குறுகிய கடைகள், போக்குவரத்து பிரச்சனைகளால் நாங்கள் அங்கு செல்லவில்லை. இங்கு தொடர்ச்சியாக வியாபாரம் செய்து வருகிறோம். காந்தி மார்க்கெட்டில் 773 கடைகள் இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். அது உண்மை இல்லை. தற்போது சில்லரை, மொத்த வணிகர்கள் என 3 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். புதிய மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் தரப்பில் ஆதரவு தருகிறோம். ஆனால் திருச்சி காந்தி மார்க்கெட்டை முழுமையாக இடமாற்றம் செய்யக்கூடாது. பஞ்சப்பூரில் மார்க்கெட் வருவதையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஆனால் , காந்தி மார்க்கெட்டை காலி செய்துவிட்டு பஞ்சப்பூர் மார்க்கெட் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை. கடையின் புதிய மார்க்கெட்டில் வெங்காய மண்டிக்கும், உருளைக்கிழங்கு மண்டிக்கும் இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் வலியுறுத்தி பேசினர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, வெங்காய மண்டி தரகு வர்த்தக சங்க செயலாளர் தங்கராஜ் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கமலக்கண்ணன், கலிலுல் ரகுமான், அப்துல் ஹக்கீம், கண்ணதாசன் உள்பட 12 வியாபார சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக கலெக்டர் பேசும்போது, இந்தக் கூட்டம் காந்தி மார்க்கெட் மற்றும் புதிய மார்க்கெட் குறித்த கருத்து கேட்பு கூட்டம் தான். இது முடிவு அல்ல. இதனால் வியாபாரிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
Comments are closed.