தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்திபெற்று விளங்கும் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்.5 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 6-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிமை (ஏப்.5) மாலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. ஏப்.6-ஆம் தேதி காலை 8 மணி முதல் காலை 9 மணிக்குள் காப்புகட்டுதல் நடைபெறுகிறது. அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்புகட்டி விரதம் தொடங்குவர். மேலும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். 7ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். மேலும், 13ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ஆம் திருநாளான ஏப்.14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சிதருகிறார். பத்தாம் திருவிழாவான ஏப்.15ஆம் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. ஏப்.16 மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் ம. லட்சுமணன் செயல் அலுவலர் நா. சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.