12 மணி நேரத்தில் மூன்று நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை- திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை…!
காவேரி மருத்துவமனை, திருச்சி கண்டோன்மென்ட் மற்றும் தென்னூர் மையங்களில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் அளித்த நபர்களிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகங்கள் மூன்று நோயாளிகளுக்கு 12 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். மருத்துவ உலகில் இது ஓர் புதிய மைல்கல் ஆகும். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் டி.செங்குட்டுவன் மற்றும் சிறுநீரக மாற்று மருத்துவ நிபுணர் டாக்டர் சக்தி செல்வகுமார் ஆகியோர் கூறுகையில், மூளைச்சாவு அடைந்தவர்கள் மூலம் தானமாக பெறப்பட்ட மூன்று சிறுநீரகங்கள் மருத்துவ குழுவினர் மூலம் மூன்று நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இவ்வளவு குறுகிய நேரத்தில் மூன்று மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருந்தது. சிறுநீரக அறுவை சிகிச்சைத்துறை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் தலைமையில், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிகுமார் உதவியுடன் கண்டோன்மென்ட் மற்றும் தென்னூர் மையங்களில் இரண்டு அறுவை சிகிச்சை குழுக்கள் ஒரே நேரத்தில் பணியாற்றின. மயக்கவியல் துறை தலைவர் டாக்டர். செந்தில்குமார், காளியண்ணன் தலைமையிலான மூன்று குழுக்கள், அறுவை சிகிச்சையின் போது அதிக ஆபத்து நேரும் வாய்ப்புள்ள மூன்று நோயாளிகளுக்கும் நிபுணத்துவம் நிறைந்த சமநிலையான கவனிப்பை உறுதி செய்தனர்.
பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முதல் மாற்று அறுவை சிகிச்சை காவேரி கண்டோன்மென்ட் மருத்துவமனையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இதே மருத்துவமனையில் இரண்டாவது மாற்று அறுவை சிகிச்சையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்றாவது மாற்று அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனை தென்னூர் மையத்திலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூன்று நோயாளிகளும் டயாலிசைசில் இருந்து விடுதலை பெற்று பூரண குணமடைந்தனர். தங்களுக்கு நேர்ந்திருந்த மிகப்பெரும் சோகத்தின் இடையிலும் பிறரின் உயிரை காக்க முன்வந்த மதுரையைச் சேர்ந்த இரண்டு நன்கொடையாளர் குடும்பங்கள் மூலம் தான் இந்த அற்புதம் சாத்தியமானது. இது தொடர்பான விழிப்புணர்வை காவேரி மருத்துவமனை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று கூறினர்.

Comments are closed.