சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், திமுகவை விமர்சிக்கும்போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் மற்றும் பெண் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம், சொல்வதற்கு சாதனைகளும் – செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.