மாநில கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்கிறார்கள் …* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று( ஆகஸ்ட் 9) நடைபெற்றது. முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவ முகாமை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், மக்களுக்கான மிகப்பெரிய திட்டமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை அலசி ஆராய்ந்து மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் மாணவர்கள் உயர்நிலையை அடைவார்கள். மாணவர்கள் கனவு மட்டும் கண்டால் போதும் அதை நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம் எனக் கூறுவது தான் மாநில கல்விக் கொள்கை. மாணவர்களுக்கு எந்தவித அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளோம். தமிழ்நாடு இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றும் என முதல்வர் உறுதியாக கூறியுள்ளார் மூன்றாவது மொழி அல்ல 22-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் படிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் எதையும் கட்டாயப்படுத்த கூடாது. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு நமக்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டது தான் மாநிலங்களுக்கான கொள்கை. மாநில கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காக விமர்சனம் செய்கிறார்கள். மாநில கல்விக் கொள்கையால் என்ன பயன் என்பதை ஆராய்ந்து விட்டு அதன் பின் இதுகுறித்து பேசலாம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த பொழுது பொதுப்பணி துறையையும், நெடுஞ்சாலை துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டு டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் கவனம் செலுத்தவில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார். விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்கிறார் என்று தெரிவித்தார்.
Comments are closed.