திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கண்ணனூரில் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மேடையின் அருகே நின்று கொண்டிருந்த முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி பேராசிரியருமான முகிலன் என்பவர் அங்கு நின்று கொண்டிருந்த காளி பட்டியைச் சேர்ந்த மைக்ரோ பயாலஜி மூன்றாம் ஆண்டு படிக்கும் பவித்ரன் என்ற மாணவரை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார். அதை மதிக்காமல் மாணவர் பவித்ரன் அங்கிருந்து வெளியே சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் மாலை 4 மணியளவில் கல்லூரியில் இருந்து மாணவர் பவித்ரன் வெளியே சென்றபோது பவித்திரனுக்கும், பேராசிரியர் முகிலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முகிலன், மாணவரின் அடையாள அட்டையை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பவித்ரன் இரவு 8 மணி அளவில் தனது சக நண்பர்களான ஜீவா, பிரதீப் மற்றும் முதலாம் ஆண்டு மாணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து காலி மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து கல்லூரி வாசலில் வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கல்லூரி அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.