Rock Fort Times
Online News

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை- சுகாதாரத்துறை விளக்கம்…!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக வருகிறார்கள். காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில், சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே.புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று” அறிவுறுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்