Rock Fort Times
Online News

காவிரித்தாய் கை கொடுத்ததால் கரை புரண்டோடும் தண்ணீர்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்…!

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களும் ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது.இந்நாளில், புதுமண தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி அன்னையை வழிபட்டு ஆற்றில் விடுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் தாலி மாற்றிக் கொள்வார்கள். விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.இந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு காவிரி கரையோரப் பகுதிகளில் ஆடி 18 விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் தங்களது உறவினர்களுடன் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள காவிரி கரையில் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை வாழை இலையில் வைத்து சூடம் ஏற்றி காவிரி அன்னையை வழிபட்டு தாலி கயிறு மாற்றிக் கொண்டனர். புதுமண தம்பதிகள் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டி மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகளும் விவசாயம் செழிக்க வேண்டி அன்னையை வழிபட்டுக் கொண்டனர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மட்டுமின்றி சிந்தாமணி ஓடத்துறை படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, முக்கொம்பு சுற்றுலா மையம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் பொதுமக்கள் திரண்டு பூஜைகள் செய்து காவிரி அன்னையை வழிபட்டனர். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் அறிவுறுத்தினர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோவில்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்