இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்த சூப்பர் ஹீரோ ! மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய நினைவலைகள் !
90 களின் தொடக்கத்தில் அதள பாதாளத்தில் விழுந்து கிடந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மறுசீரமைத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தற்போது மரணம் அடைந்துள்ளார். அவரின் பொருளாதார சீர்திருத்தங்களை தற்போது நினைவு கூறுவது மிகவும் முக்கியம். 1932 ல் பிறந்த மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13 ஆவது பிரதமராக இருந்தார். ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக மூன்றாவது அதிக காலம் பிரதமராக இருந்தவர் மன்மோகன்சிங் மட்டுமே. இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரான மன்மோகன் சிங் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் ஆவார். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு முழு ஐந்தாண்டு பதவி காலத்துக்கு பிறகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும் இவரே.ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு மன்மோகன் சிங் 1966 லிருந்து 1969 வரை ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றினார். பின்னர் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக தனது அதிகார வர்க்க வாழ்க்கையை தொடக்கினார். 1970 கள் மற்றும் 80களில் மன்மோகன் சிங் இந்திய அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இந்திய திட்டக் குழுவின் தலைவர் போன்ற அதிமுக்கிய பதவிகளை வகித்தவர். 1991ல் இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி பி.வி நரசிம்மராவ் வியக்கத்தக்க வகையில் மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்தியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் மேற்கொண்டார். 2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த போது அதன் தலைவர் சோனியா காந்தி எதிர்பாராத விதமாக பிரதமர் பதவியை மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார்.
2006 -07-ல் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தின் கீழ் இந்தியா அதன் அதிகபட்ச ஜிடிபி வளர்ச்சி வீதமான 10.8 சதவீத வளர்ச்சி விதத்தை எட்டி உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியது. வாஜ்பாய் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தங்க நாற்கர சாலை மற்றும் நெடுஞ்சாலை நவீனமயமாக்கல் திட்டத்தை மன்மோகன் சிங்கின் அரசாங்கம் தொடர்ந்தது. மன்மோகன் சிங்கின் கீழ் நிதியமைச்சகம், அதிகரித்து வரும் விவசாயிகளின் கடனிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தொழில்துறைக்கு ஆதரவான கொள்கைகளை உருவாக்கவும் தீயாக வேலை செய்தது. இப்படியாக டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பல பொருளாதார மற்றும் வர்த்தக சீர்திருத்தங்கள் இலங்கையைப் போல திவால் ஆகிப்போகும் அளவுக்கு அதள பாதாளத்தில் விழுந்திருந்த இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரும் ஏற்றத்தை கொண்டு வந்தது என்றால் அது மிகையல்ல. இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வந்த மன்மோகன் சிங் தற்போது வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பேரிழப்பு. இவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உலக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.