Rock Fort Times
Online News

வாட்டத் தொடங்கியது கோடை வெயில்..! பரிதவிக்கும் பறவைகளுக்கு உணவிடுங்கள்…- தமிழக முதல்வர் வேண்டுகோள்!

வழக்கமாக மே மாதத்தில் மட்டுமே இருக்கும் கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27-ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது. இதனால் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதில் அதிகபட்சமாக சேலத்தில் 102.2 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலரும் வெளியில் தலைகாட்ட முடியாமல் ஏ.சி. அறைகளிலும், மரங்கள் நிறைந்த நிழல் பகுதிகளிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருவதால், பறவைகள் தண்ணீரும், உணவும் கிடைக்காமல் தவித்து வருகின்றன. இந்த நிலையில், “கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்!” என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாடியில் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் புகைப்படங்களை பகிர்ந்து இதனை அவர் தெரிவித்துள்ளார்..

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்