திருச்சி சோனா-மீனா தியேட்டர் எதிரே நிறுவுவதற்காக பாலக்கரை பகுதியில் 14 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை அகற்றம்…!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவிற்கு பிறகு திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. ஆனால், சட்ட சிக்கல்கள் காரணமாக அந்த சிலையை திறக்க முடியவில்லை. இதனால், சிவாஜி சிலை 14 ஆண்டுகளாக துணியால் மூடப்பட்டு இருந்தது. சிவாஜி சிலையை திறக்க கோரி அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இருந்தாலும் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் சிலையை திறக்க இயலவில்லை. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், சிவாஜி சிலையை பாலக்கரை பகுதியில் திறக்க முடியாவிட்டாலும் வேறு இடத்திற்கு மாற்றி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, இதுகுறித்து முதல்- அமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்நிலையில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள சிவாஜி சிலையை சோனா-மீனா தியேட்டர் எதிரே உள்ள சிறிய பூங்காவில் நிறுவி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா மே 9-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சிவாஜி சிலையையும் திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று (29-04-2025) பாலக்கரை பகுதியில் நீண்ட காலமாக மூடி வைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை அகற்றப்பட்டது. கிரேன் உதவியுடன் சிலை அகற்றும் பணியின்போது மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சிவாஜி ரசிகர்கள் ஆர்.சி.ராஜா, ராமநாதன், சேகர், நாகராஜன், தீரன் நகர் முகுந்தன், நாராயணசாமி, பேச்சி, சிவாஜி மாதவன் மற்றும் ஆர்.சி. பிரபு,
சோனா ராஜவேலு, சந்தோஷ், சேதுராமன் மற்றும் பலர் உதவி புரிந்தனர்.
Comments are closed.