திருச்சி-தஞ்சை சாலையில் சர்வீஸ் சாலை பிரச்சனை விஸ்வரூபம்…- நூற்றுக்கணக்கானோர் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2010ம் ஆண்டு நான்குவழி சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி பகுதிகளில் பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, போன்ற மத்திய அரசு நிறுவனங்களும், என்ஐடி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பள்ளி கல்லூரிகளும் அமைந்துள்ளன. சிப்காட் தொழிற்பேட்டையும் அமைந்துள்ளது. ஆகவே நாளொன்றுக்கு ஏராளமான தொழிலாளர்களும், மாணவ மாணவிகளும் இந்த பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். பிரதான சாலையாக உள்ள திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. ஆனால், சர்வீஸ் சாலை இதுவரை அமைக்கப்படவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்களில் திருச்சி- தஞ்சை சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என்பது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆனால், வெற்றி பெற்றதும் அரசியல்வாதிகள் இதனை கண்டு கொள்ளவில்லை. இதனால், இந்த மெயின் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டு வருகின்றன. சர்வீஸ் சாலை அமைக்க கோரி சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியும் இதுவரை எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் சர்வீஸ் சாலை அமைக்க கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர். சர்வீஸ் சாலை அமைக்காமல் மக்கள் உயிருடன் விளையாடும் தமிழக அரசையும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மகேஷ் பொய்யா மொழியை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இன்று (மார்ச்17) காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இந்த போராட்டத்தால் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Comments are closed.