சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக இன்று(05-05-2024) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடம் செயலிழந்து உள்ளது. இதுகுறித்து விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதேபோல நீலகிரி, ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளிலும் சிசிடிவி கேமரா செயல் இழந்துள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார். அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதற்கான சான்றுகள் அவரது உரையில் அமைந்துள்ளது. அவருடைய நிலையை மறந்து பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக, தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையில் உள்ளது. இந்த பிரச்சனையில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருச்சிக்கு வந்த தொல். திருமாவளவனை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு, சிறுத்தைகள் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அரசு, திருச்சி மண்டல துணைச் செயலாளர் பொன்.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.