திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். அப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால், இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைக்க வேண்டாம் என, ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மேல், கடையின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டு கடையின் பின்புறம் வியாபாரம் தொடர்ந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த ராம்ஜி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர், கடையை மூடுமாறு நாங்கள் எச்சரித்து விட்டு சென்ற நிலையில் ஏன் மீண்டும் வியாபாரம் செய்தீர்கள் என கேட்டுள்ளனர். இதையடுத்து கடை உரிமையாளருக்கும் காவலர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவலர் கடை உரிமையாளரை ஒருமையில் திட்டி அடித்தார். போலீசார் அடிக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இது குறித்து விசாரித்த திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தலைமை காவலர் கார்த்திக்கை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் .
Comments are closed.