திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? என்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வள்ளலார் நகர் சூரக்குப்பம் பகுதியை சேர்ந்த சேகர் ( வயது 50) என்பதும், மரம் வெட்டும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது.
திருச்சி வந்த இவர் இரவு கடலூருக்கு செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்வதற்கு பதிலாக தவறுதலாக விழுப்புரம் செல்லும் பஸ்ஸில் ஏறியதாக கூறப்படுகிறது. அந்த பஸ் சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது தான், பஸ் மாறி ஏறியதை அறிந்த சேகர் ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே குதித்ததும், இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் அரசு பஸ் டிரைவர் யாதவர், நடத்துனர் ரவீந்திரன் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ++++
Comments are closed, but trackbacks and pingbacks are open.