டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்- முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு (VS) டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும், அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக?. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா?. தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா?. மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன்தான் எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டெல்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கும், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குமான வலிமை தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. அதனால் நாம் மக்களிடம் செல்வோம். களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா நம்மை விட்டு மறைந்தபோது, தி.மு.கழகத்தையும் ஆட்சியையும் கலைஞர் தன் தோளில் சுமந்து, 1971ம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றியுடன் தொடர்ந்து ஆட்சியில் அமரச் செய்தார். அதுபோல கலைஞர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவருடைய கொள்கைப் பாதையில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து அமைந்திட, 2026 தேர்தல் களத்தில் நிச்சயம் வெல்வோம் என உறுதி கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.