Rock Fort Times
Online News

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – சிக்கினார் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்…

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 68). இவர் அதே பகுதியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி வருகிறார். இந்த இன்ஸ்டிட்யூட்டிற்கு அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்கள் தட்டச்சு பயின்று வருகின்றனர். இந்தநிலையில் தட்டச்சு பயில்வதற்கு வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு சத்தியமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சடைந்த அந்த மாணவி பயிற்சிக்கு செல்வதை பாதியில் நிறுத்தினார். இதுகுறித்து பெற்றோர் மகளிடம் கேட்டபோது, இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சத்திய மூர்த்தியின் பாலியல் சீண்டல் குறித்து அழுதபடி தெரிவித்துள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சத்தியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினார். மேலும், அவரது செல்போனை வாங்கி சோதனையிட்டபோது அதில் தட்டச்சு பயில்வதற்காக வந்த இளம் பெண்கள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த மாணவிகளுக்கு தெரியாமல் அங்கங்களை புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கைதான சத்தியமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தின் போதே இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை தொடங்கி நடத்தி வந்துள்ளார். 30 ஆண்டுகளாக இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வருகிறது. ஆகவே சத்தியமூர்த்தியின் பாலியல் பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் குற்றச்சாட்டில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்