பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பச்சேரா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜனவரி 17 ம் தேதி தேவேந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்குமிடையே வாக்குவாதமும், கை கலப்பும் நடந்தது. அப்போது தேவேந்திரன், மணிகண்டனை அரிவாளால் வெட்டியதில் அவர் உயிரிழந்தார். இதன் காரணமாக ஊர் மக்கள் வி.களத்தூர் காவல் நிலையத்தை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி மற்றும் நானும் சென்று அந்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தோம். கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சில தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இது, சாதி ரீதியான படுகொலை என பரப்பப்படுகிறது. அது தவறான தகவல். தனிப்பட்ட இருவருக்குள் நடந்த பிரச்சனை காரணமாக தான் கொலை நடந்துள்ளது. காவல் நிலையத்தை சூறையாடியவர்கள் எந்த ஒரு தனிப்பட்ட கட்சியும் கிடையாது. அந்த ஊர் பொதுமக்கள் தான் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்தை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 17-ம் தேதி காலை 8 மணி அளவில் மணிகண்டனுக்கு தேவேந்திரன் இடையே சண்டை நடந்துள்ளது இது தொடர்பாக மணிகண்டன் காவல் நிலையம் சென்று வாய்மொழி புகார் அளித்துள்ளார்.
அவர் புகார் அளிக்க சென்றபோது வேறொரு நபர் வேறு புகார் கொடுக்க காவல் நிலையம் வந்துள்ளார். அப்பொழுது அவர் ஒரு இடத்தை கூறிய போது அந்த இடம் காவலர் ஸ்ரீதருக்கு தெரியவில்லை. அப்பொழுது மணிகண்டன் அந்த இடம் தனக்குத் தெரியும் எனவும் தான் அழைத்துச் செல்கிறேன் என ஸ்ரீதரை அழைத்துச் சென்றுள்ளார். அதன் காரணமாக ஸ்ரீதர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மணிகண்டனை ஏற்றிக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுதுதான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. விதிகளின்படி அவ்வாறு செல்லக்கூடாது. அதன் காரணமாக ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மணிகண்டன் கொலை செய்யப்பட்டபோது அந்த இடத்தில் ஸ்ரீதர் இருந்தது உண்மைதான். அவர் கொலையை தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக தேவேந்திரன், மணிகண்டனை கொலை செய்துவிட்டார் உடனடியாக தேவேந்திரனை, காவலர் ஸ்ரீதர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தார். கொலை செய்த போது தேவேந்திரன் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த கொலை தொடர்பாக தேவேந்திரன், அருண் மற்றும் காவலர் ஸ்ரீதர் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தேவேந்திரன் அருண் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவலர் ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
Comments are closed.