Rock Fort Times
Online News

லால்குடியில் ரூ.36.58 கோடியில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம்:* துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திருச்சி மாவட்டம், லால்குடியில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய நகராட்சி அலுவலகம் மற்றும் நவீன பேருந்து நிலையத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம், லால்குடியில்  ரூ.4.69 கோடி மதிப்பீட்டில், பூவாளூர் சாலையில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இதேபோல லால்குடி-அரியலூர் நெடுஞ்சாலையில் 5.32 ஏக்கர் பரப்பில் ரூ.31.89 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதில் 40 பேருந்துகள் நிற்கும் அளவுக்கு வசதி, 120 கடைகள், 2 உணவகங்கள் மற்றும் ஏடிஎம் வசதிகள் உள்ளன. இங்கிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் புறப்பட்டு செல்லும். இதற்கான திறப்பு விழா இன்று(16-02-2026) நடைபெற்றது.  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நகராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சிவசங்கர், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்