ஒரே பூஜை ஓஹோன்னு வாழ்க்கை, அள்ளிவிட்ட மந்திரவாதி மீது பாய்ந்தது வழக்கு- வக்கீலை தீர்த்து கட்டவும் லட்சக்கணக்கில் பணம் கறந்தது அம்பலம்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவெறும்பூர் மலைக்கோயிலை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சதீஷ்பாபு (வயது 23). பட்டதாரியான இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். வேலை தொடர்பாக யூடியூபில் தேடிக் கொண்டிருந்தபோது சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரகு ( 45) என்பவரின் மாந்திரீக சித்து வேலை வீடியோக்களை பார்த்தார். இதனையடுத்து சதீஷ்பாபு, ரகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரகு, ஒரு பூஜை செய்தால் போதும் ஒரே வாரத்தில் கோடீஸ்வரராக மாற்றி காட்டுகிறேன் என ஆசை வார்த்தை கூறியதோடு பூஜை செய்வதற்கு அட்வான்ஸாக 3000 ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளார். அவரது ஆசை வார்த்தையில் மயங்கிய சதீஷ், ஜிபே மூலம் ரகுவின் வங்கிக் கணக்கிற்கு 3000 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், ரகு சொன்னது போல் பூஜை நடத்தாமல் போக்கு காட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ்பாபு, ரகுவை நேரில் சந்தித்து பேசி தான் அனுப்பிய பணத்தை திரும்ப தருமாறு கேட்டபோது ரகு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சதீஷ் பாபு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் ரகு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகி உள்ளது. திருச்சி கல்லூரி பேராசிரியர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த முரசொலி மாறன் என்கிற சிபி என்ற வழக்கறிஞரை கொலை செய்ய வேண்டும். அதில் எவ்வித சந்தேகமும் ஏற்படாதவாறு விபத்தில் சிக்கி மரணித்தது போல மாந்திரீகம் செய்து கொலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக ரகு பல லட்ச ரூபாய் கேட்டதுடன் அதற்காக அட்வான்ஸ் தொகையாக சில லட்சங்களை தனது மனைவியின் வங்கிக்கணக்கு மூலம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்தப் பேராசிரியரும் – ரகுவும் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.