Rock Fort Times
Online News

திமுக ஆட்சியின் கடைசி ஆண்டு: வேலை திட்டங்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!

சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்து கொண்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம். இதுதான் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டு; இதற்கு மேலே திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதை திமுக அரசுக்கு பாராட்ட மனமில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை மத்திய அரசு செய்துள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை. திமுக ஆட்சி நிறைவு பெறும்போது ரூ.5 லட்சம் கோடி கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கும். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. கடன் பெற்றதில் சாதனை படைத்த ஆட்சியாக ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது. வெ தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. வெ தூய கட்சியா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது. செவிலியர்களை பணி நிரந்தரப்படுத்தாமல் திமுக அரசு திட்டமிட்டே ஏமாற்றுகிறது. கல்விக்கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டர் மானியம் என்ற திமுக அறிவிப்புகள் என்ன ஆனது? எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு பின் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தவறான தகவலை கூறுகின்றனர். போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்களைத்தான் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் போலி வாக்காளர்களை வைத்து திமுக இவ்வளவு நாட்களாக வெற்றி பெற்று வந்துள்ளது. இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர் பெற்று வந்து திமுகவுக்கு வாக்களித்தனர். எஸ்.ஐ.ஆர். நடைமுறை எல்லா கட்சிக்கும் பொதுவானது. அதில் என்ன குறைபாடு உள்ளது? உண்மையான வாக்காளர்கள் விடுபட்டிருந்தால், படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்