Rock Fort Times
Online News

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று(மார்ச் 28) தொடக்கம்… முதல் 2 வாரங்கள் டோனி விளையாட மாட்டார் !

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று( மார்ச் 28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் – சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. இன்று முதல் மே 31ம் தேதி வரை மொத்தம் 74 போட்டிகள் களைகட்டவுள்ளன. நண்பகல் 3:30, இரவு 7:30 மணிக்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது சின்னச்சாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 11 இருக்கைகள் காலியாக விடப்பட்டதுடன் தொடக்க விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடவுள்ளன. இன்று ஐபிஎல் போட்டி தொடங்கினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டி 30ம் தேதி தொடங்குகிறது.

முதல் 2 வாரங்கள் டோனி விளையாட மாட்டார்:

இந்நிலையில் மகேந்திரசிங் டோனி யால், முதல் 2 வாரங்கள் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் 5 போட்டிகளில் டோனி விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு தசை பிடிப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரியாகிவிடும். இருப்பினும், 15 நாட்கள் வரை, ஓய்வு எடுப்பது சிறந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், டோனி 15 நாட்கள் விலக உள்ளார்.  இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்