வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் வெற்றி கழகம் தனித்து போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாளை(ஏப்ரல் 12) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 தொகுதி த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்நிலையில் விஜய், எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த 10 நாட்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.