மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் தானம்…* மாற்று நோயாளிகளுக்கு பொருத்திய திருச்சி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள்!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, கன்னிவாடியை சேர்ந்தவர் சித்ரா (வயது45). இவர், இம்மாதம் ஜனவரி 14-ந்தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்து கரூர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சித்ரா மூளைச்சாவு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைக்கேட்டு சித்ராவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காத்திருப்பு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்ற உறுப்புகள் தமிழ்நாடு உடல் உறுப்புகள் மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. பின்னர் சித்ராவின் உடல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் சார்பாக தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார், திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவரும், அசோசியேட் துணை தலைவருமான ஜெயராமன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Comments are closed.