2026-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று( ஜன.20) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து கலைஞர் தொடர்பான புத்தகத்தை வழங்கி வரவேற்றார். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும் மலர் மற்றும் புத்தகம் வழங்கினார். பேரவையில் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசினார். ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக சட்டப்பேரவையை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்தார். “மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்க வேண்டியது கட்டாயம். அதில் தனிப்பட்ட கருத்துகளைச் சேர்க்கவோ, உரையை நீக்கவோ அரசியலமைப்பில் இடமில்லை” எனக் கூறிய முதல்வர், பேரறிஞர் அண்ணாவின் “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை” என்ற கூற்றை நினைவுபடுத்தினார். அந்த பதவி இருக்கும் வரை மரியாதை வழங்கும் மரபை கலைஞரும், அண்ணாவும் பின்பற்றியதாகவும் குறிப்பிட்டார். மேலும், மக்கள் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மாநில நிர்வாகத்தை முடக்கும் வகையிலும், பொது மேடைகளில் அரசியல் விமர்சனங்களைச் செய்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பப்பட்ட ஆளுநர் உரை பேரவையில் வாசிக்கப்பட்டதாகவே கருதப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஒருநாள் செய்தியாக கடந்து விட முடியாத முக்கியமான அரசியலமைப்புச் சிக்கல் என்றும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.