2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும்- த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று( நவ. 27) இணைந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காணப்பட்டவன் நான். அதிமுக உருவானபோது எம்ஜிஆர் உடன் சென்றவன் நான். ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றவன். அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம் .அது நடக்கவில்லை. என்னை திட்டமிட்டு வெளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி. நான் தவெகவில் இணைந்ததற்கு காரணம் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய். நேர்மையான ஆட்சியை கொடுக்க ஒருவர் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர் . தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைவதற்காகவே தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தேன். தவெகவுக்கு வெற்றியை தர மக்கள் தயாராக இருக்கிறார்கள் . 2026 ம் ஆண்டு தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும். சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார். பள்ளிக் குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் அப்பா, அம்மா விஜய்க்கு ஓட்டு அளியுங்கள் என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார். அமைச்சர் சேகர்பாவுவை நான் சந்திக்கவே இல்லை. திமுகவில் இருந்தோ, பாஜகவில் இருந்தோ யாரும் என்னை அணுகவில்லை. தினம் ஒரு கட்சிக்கு சென்றவன் நான் அல்ல. எல்லா மாநிலங்களிலும் மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை விஜய் எட்டுவார். இன்று திமுக வேறு, அதிமுக வேறு அல்ல. இரண்டும் ஒன்றாக இணைந்துதான் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன என்பதை நாடறியும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.